Wednesday, April 13, 2011

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் இந்தியா

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் இந்தியா, சென்ற 2010 -11ம் நிதியாண்டில், 1,248 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டை விட 200 சதவீதம் (416.41 கோடி ரூபாய்) அதிகம். நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் இந்தியா, உள்நாட்டில் அணு மின் நிலையங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியபிரதேசம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வினியோகம் செய்து வருகிறது.

Monday, April 4, 2011

அன்னிய நிதி நிறுவனங்கள் முதலீடு

மும்பை: ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் பொருளாதார நெருக்கடி, மத்திய கிழக்கு நாடுகளில் கேள்விக்குறியாகி உள்ள அரசியல் ஸ்திரத்தன்மை உள்ளிட்ட காரணங்களால் அன்னிய நிதி நிறுவனங்களின் பார்வை முன்னேறி வரும் நாடுகள் பக்கம் திரும்பியுள்ளது.

இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அன்னிய நிதி நிறுவனங்கள், இங்கு அதிகளவில் முதலீடு மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன.

சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2010-11-ம் நிதியாண்டில் அன்னிய நிதி நிறுவனங்கள், 9 லட்சத்து 92 ஆயிரத்து 595 கோடி ரூபாய்க்கு பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளதாக பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி தெரிவித்துள்ளது. இதே காலத்தில் அன்னிய நிதி நிறுவனங்கள், 8 லட்சத்து 46ஆயிரத்து 157 கோடிரூபாய் மதிப்புள்ள பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை விற்பனை செய்துள்ளன. இதன்படி அன்னிய நிதி நிறுவனங்கள் இவ்வகை நிதியினங்களில் மேற்கொண்டுள்ள முதலீடு, ஒரு லட்சத்து 46ஆயிரம் கோடிரூபாய் என்ற அளவிற்கு உள்ளது. இதில் பங்குகளில், ஒரு லட்சத்து 10 கோடி ரூபாயும் , கடன் பத்திரங்களில், 36ஆயிரத்து 317 கோடிரூபாயும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக செபி தெரிவித்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய பங்குச்சந்தையில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.

கடந்த 2009-ம் காலண்டர் ஆண்டில்,83ஆயிரத்து 423 கோடிரூபாய்க்கு அன்னிய நிதி நிறுவனங்கள் பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்தன. இது கடந்த 2010-ம் ஆண்டு ஒரு லட்சத்து 79 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது.பங்குச்சந்தையை பொறுத்தவரை அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு என்பது நிலையற்றதாக கருதப்படுகிறது.முதலீடு எந்த நேரத்திலும் திரும்பப் பெற வாய்ப்புள்ளது. ஆனால், தற்போது உலகளாவிய பொருளாதார மந்த நிலையால் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதலீடு தொடர்ந்து அதிகரிக்கும் என்று நிதிஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாண்டு தொடக்கத்தில்சரிவைசந்தித்த இந்திய பங்குச் சந்தை தற்போது எழுச்சி பெறத் தொடங்கியுள்ளது. இது அன்னிய முதலீடு அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

'2ஜி' அலைக்கற்றை ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி முறைகேடு, காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் போன்றவைசர்வதேச நாடுகளின் கவனத்தை இந்தியாவின் பக்கம் ஈர்த்துள்ளது.

இந்த நிலையிலும், நாட்டின் வலிமையான பொருளாதார வளர்ச்சி காரணமாக, அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தையில் தொடர்ந்து முதலீடு மேற்கொண்டு வருகின்றன.

மேலும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி எடுத்து வரும் நடவடிக்கையும், பொதுத்துறை நிறுவனங்களில் குறிப்பிட்ட அளவிற்கு பங்கு விற்பனை செய்ய, மத்திய அரசுஅனுமதி அளித்திருப்பதும் அன்னிய முதலீடுகள் குவிய காரணமாக கூறப்படுகிறது. கடந்த நிதியாண்டில் பொதுத்துறையை சேர்ந்த கோல் இந்தியா, எம்.ஓ.ஐ.எல் மற்றும் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனங்களின் பங்கு வெளியீட்டில் அதிக அளவில் அன்னிய நிதி நிறுவனங்கள் முதலீடு செய்து புதியசாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.நடப்பு நிதியாண்டிலும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் மத்திய அரசு40ஆயிரம் கோடிரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. இதனால் இந்திய பங்குச்சந்தையில் நடப்பாண்டிலும் அன்னிய முதலீடு பெருமளவு அதிகரிக்கும் எனலாம்.